உயரிய கல்வித் தகுதியுடன் இந்தியா அல்லது மற்ற நாடுகளிலிருந்து அமெரிக்க சென்று பணிபுரிவோருக்கு அந்நாடு ஹெச்-1பி நுழைவு இசைவுகளை வழங்குகிறது.
'அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே!' என்ற முழக்கத்துடன் அதிபர் ட்ரம்ப் அரியணை ஏறியதிலிருந்து, இந்த வகை நுழைவு இசைவுகளை வழங்குவதில் பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், ஹெச்-1பி நுழைவு இசைவில் கொண்டுவரப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்துவருகிறது.
இது இந்தியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், நாஸ்காம் வணிக சங்கத்துடன் காணொலிக் காட்சி மூலம் உரையாடிய வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, "கடந்த பிப்ரவரி மாதம் அதிபர் ட்ரம்ப் இந்திய வந்திருந்தபோது பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து அவரிடம் பேசினார்.
கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் காலாவதியாகும் ஹெச்-1பி நுழைவு இசைவுகளின் காலக்கெடுவை நீட்டிக்கக் கோரியுள்ளோம். கரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்களாக, செவிலியராக, தொழில்நுட்பப் பணியாளர்களாக இந்தியர்கள் அமெரிக்காவுக்கு உதவிவருவதாக நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.
உயரிய கல்வித் தகுதியுடன் ஹெச்-1பி நுழைவு இசைவுகள் மூலம் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் அந்நாட்டு நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக உள்ளனர்.
இந்தியா-அமெரிக்கா இடையேயான நட்பின் அடித்தளம் இருநாட்டு மக்களின் நல்லுறவில் உள்ளதாக ட்ரம்பிடம் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
ஆகையால், ஹெச்-1பி நுழைவு இசைவுகளின் நீண்டகால நலனைக் கருத்தில்கொண்டு அதனை அமெரிக்கா பரிசீலிக்கும் என இந்தியா நம்பிக்கையுடன் உள்ளது" என்றார்.
இதையும் படிங்க : சீன விமானங்களுக்குத் தடை விதித்த அமெரிக்கா!