உலகம் முழுவதும் கரோனா வைரசின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. மருத்துவச் சேவைகள் சிறப்பாக உள்ள நாடுகளும்கூட கரோனா வைரசை எதிர்கொள்ள திணறிவருகின்றன. சர்வதேச அளவில் 3.3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குநர் மைக்கெல் ஜே ரெயன் பேசுகையில், ''இந்தியா மிகவும் அடர்த்தியான, அதிக மக்கள் தொகை கொண்ட நாடு.
உலகையே அச்சுறுத்திய சின்னம்மை, போலியோ ஆகிய இரண்டு நோய்களை அகற்றியதில் இந்தியா உலகிற்கு முன்நின்று வழிகாட்டியது. அதேபோல் மீண்டும் கரோனா வைரசை அகற்றுவதிலும் இந்தியா முன்நிற்கும். இந்தியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர வேண்டும்'' என்றார்.
ஊரடங்கு உத்தரவு, மாநில எல்லைகள் மூடல், முக்கிய மாவட்ட எல்லைகள் மூடல், ரயில்கள் ரத்து, விமான போக்குவரத்து முழுவதும் ரத்து, வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்படுவது என இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கரோனாவுக்கு தீர்வு? - புதிய மருந்து பரிந்துரை