கரோனா வைரஸ் நிலை குறித்து ஜார்ஜியா நாட்டின் குடியரசுத் தலைவருடன் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைபேசியில் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய ராம்நாத் கோவிந்த், "கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த உலக நாடுகளுடன் ஒன்றிணைந்து இந்தியா செயல்பட்டுவருகிறது. 150 உலக நாடுகளுக்குத் தேவையான மருந்துப்பொருள்களை வழங்கி வைரஸ் தொற்றிலிருந்து மற்ற நாடுகளை காப்பாற்ற இந்தியா உதவிவருகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தொற்றால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், வைரஸைக் கட்டுப்படுத்த ஜார்ஜியாவின் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை. ஜார்ஜியாவில் பயிலும் இந்திய மாணவர்களை தாயகம் அழைத்துவர உதவியதற்கும், தற்போதும் அந்நாட்டில் வசித்துவரும் மக்களின் நலனில் அக்கறை செலுத்துவதற்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும், இருநாடுகளும் வர்த்தகம், பொருளாதார உறவுகளைப் பலப்படுத்துவதில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.