இங்கிலாந்து தலைநகர் லண்டனை மையமாகக் கொண்டு ‘எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ யுனிட்’ (இஐயு) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது, ‘தி எகனாமிஸ்ட் குரூப்’பை சேர்ந்தது. கடந்த 1946ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு உலகளவில் ஆராய்ச்சி செய்து, பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறது.
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள 2020ஆம் ஆண்டின் உலக ஜனநாயக அட்டவணையில் இந்தியா 53ஆவது இடத்துக்கு சரிந்துள்ளது. கடந்தாண்டு இந்தியா 51ஆவது இடத்தில் இருந்தது. இந்தியாவில் சிவில் உரிமைகள் மீதான ஒடுக்குமுறைகள், கரோனா வைரஸ் பாதிப்பை அலுவலர்கள் கையாண்ட விதம் போன்ற காரணங்களால் 53ஆவது இடத்துக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளதாக இஐயு கூறியுள்ளது.
அதன்படி, நார்வே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த நிலையில் ஐஸ்லாந்து, ஸ்வீடன், நியூசிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன. மொத்தம் 165 நாடுகளில் 23 நாடுகள் மட்டுமே முழு ஜனநாயகம் உள்ள நாடுகளாக பட்டியலில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், பாகிஸ்தான் 105ஆவது இடத்திலும், வங்கதேசம் 76ஆவது இடத்திலும், பூடான் 84ஆவது இடத்திலும் உள்ளன.