இந்தியாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், மத்திய-மாநில அரசுகளும் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துவருகின்றன.
இருப்பினும், கரோனா பரவலை முற்றிலுமாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 55 ஆயிரத்து 722 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் நாட்டில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
அவர்களில் 7 லட்சத்து 72 ஆயிரத்து 055 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர், 66 லட்சத்து 63 ஆயிரத்து 608 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 11 ஆயிரத்து 256 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
மேலும், நேற்று ஒரே நாளில் மட்டும் 579 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 610ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை இந்தியாவில் 9.5 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று (அக். 18) தேதி மட்டும் 8.5 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தினசரி கரோனா உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தைக் கடந்து உச்சத்தில் இருந்தது. ஆனால், கரோனா உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது மெல்ல மெல்ல தொடர்ந்து குறைந்துவருகிறது.
இது ஒரு நல்ல விஷயம் என்றாலும், குளிர்காலம் வருவதாலும், மக்கள் அலட்சியமாக இருந்தாலும் ஐரோப்பிய நாடுகளைப் போல கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா பரவல்: ஜிப்புடன் கூடிய மாஸ்க்குகளை வழங்கும் கொல்கத்தா உணவகம்!