குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து அமெரிக்கவின் சர்வதேச மதச் சுதந்திர ஆணையம் வெளியிட்டிருந்த கண்டன அறிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "குடியுரிமை சட்டம் குறித்து அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திர ஆணையம் (United States Commission on International Religious Freedom - USCIRF) வெளியிட்டிருந்த கண்டன அறிக்கையில் உள்ள கூற்றுகள் முற்றிலும் தவறானவை. அதில் கூறப்பட்டுள்ள கருத்து ஆதாரமற்றது.
அண்டை நாடுகளிலிருந்து மதத் துன்புறுத்தலுக்கு ஆளாகும் குறிப்பிட்ட சிறுபான்மை மதத்தவருக்கு குடியுரிமை அளிக்கும் நோக்கோடே இந்த மசோதாவானது உருவாக்கப்பட்டுள்ளது. இதனை விமர்சிக்கக் கூடாது; மாறாக வரவேற்க வேண்டும்.
குடியுரிமை மசோதா குறித்து சிறிதும் அறியாத USCIRF, இந்தியா மீது அந்த ஆணையம் கொண்டுள்ள ஒருதலைபட்ச எண்ணத்தையே பிரதிபலிக்கிறது. இந்தியாவில் குடியுரிமை பெற நினைக்கும் மற்ற சமூகத்தினர் இந்த மசோதாவால் பாதிக்கப்படமாட்டார்கள்" எனக் கூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி, அடைக்கலம் தேடி இந்தியாவுக்கு குடிபெயரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், பார்சிகளுக்கு எளிதில் குடியுரிமை வழங்கும் பொருட்டு (1955) குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதென பல்வேறு தரப்பினரும் விமர்சித்துவருகின்றனர்.
இந்த மசோதா இந்தியாவின் மதச்சார்பற்ற, பன்முகத்தன்மையை ஒருங்கேபெற்றுள்ள அரசியல்சாசன சட்டத்திற்கு எதிரானது என்றும் நாட்டை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் என்றும் அமெரிக்க மதச் சுதந்திர ஆணையம் இன்று காலை அறிக்கை வெளியிட்டிருந்தது. மேலும், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் உள் துறை அமைச்சர் அமித் ஷா மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: 'குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்படால் அமித் ஷா மீது கடும் கட்டுப்பாடு' - எச்சரிக்கும் அமெரிக்கா!