இந்தியாவில் கரோனா சமூகப் பரவல் கட்டத்தை எட்டினால் கரோனா பரிசோதனை செய்யும் கருவிகளில் பற்றாக்குறை ஏற்படும் என்றும் கரோனா தொற்று இருப்பதைக் கண்டறியும் கருவியை வழங்குமாறும் சீனாவை இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கரோனா தொற்றை கண்டறியும் கருவிகள் பற்றாக்குறையாக இருப்பதால், மருந்து உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உரிமையாளர்களிடம் கரோனா தொற்று கண்டறியும் கருவியை உற்பத்தி செய்யுமாறு சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேட்டார்.
பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், ஈரான், ஈராக், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் வென்டிலேட்டர்கள், கரோனா தொற்று கண்டறியும் கருவிகள் மற்றும் கரோனா தொற்று மருத்துவ உபகரணங்களை வழங்குமாறு சீனாவிடம் உதவிகேட்டுள்ளது. அதுபோலவே இந்தியாவும் சீனாவின் உதவியை நாடியுள்ளது.
கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் மருத்துவ உபகரணங்கள் குறித்து கண்காணிக்கவும், தேவையான மருந்து பொருட்கள் குறித்து ஆராயவும் மத்திய அரசு குழு ஒன்றை நியமித்துள்ளது. பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சில பொதுத் துறை நிறுவனங்களை 40,000 ஆயிரம் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்து தருமாறு கேட்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணைச் செயலர் லவ் அகார்வால் தெரிவித்துள்ளார்.
ஒரு லட்சத்திற்கும் குறைவான தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1000 படுக்கை வசதிகள் கொண்ட இந்தியா கரோனா சமூகப் பரவல் கட்டத்தை எட்டினால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கரோனா தொற்று உள்ளவர் மீண்டு வர மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை ஆகும் என்றும் கடுமையாக பாதிக்கப்பட்டவருக்கு 21 நாட்கள் வென்டிலேட்டர் உதவி தேவைப்படும் எனவும் தெரிவிக்கின்றனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், கரோனாவுக்கு மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அக்கழகத்தின் மூத்த விஞ்ஞானி ரத்தன் கங்காதர் தெரிவித்துள்ளார். கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க புதிய மூலக்கூறுகளைப் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்த அவர், 35க்கும் மேற்பட்ட மருந்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சிகள் பயனுள்ள வகையில் இருக்கும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா தொற்றுக்கு மருந்துத் தட்டுப்பாடு - இந்தியாவுக்கு மிகப்பெரிய சவால்!