கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனிடையே, பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்திவருகிறார். இந்நிலையில், முன்னாள் அமெரிக்க தூதர் நிகோலஸ் பர்ன்ஸுடன் ராகுல் காந்தி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடினார். அப்போது இந்தியர்கள், அமெரிக்கர்கள் டிஎன்ஏ-வில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாக ராகுல் காந்தி வேதனை தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "சகிப்புத்தன்மையுடன் இருப்பதால்தான் இந்தியா-அமெரிக்கா இடையே உறவு நீடிக்கிறது. குடியேறியவர்களின் நாடு என அமெரிக்காவை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். நாங்கள் சகிப்புத்தன்மை மிக்க நாடு. எங்கள் டிஎன்ஏ சகிப்புத்தன்மையுடன் இருந்திருக்க வேண்டும். ஆனால், அது தற்போது மறைந்துவிட்டது" என்றார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய பர்ன்ஸ், "அமெரிக்காவின் முக்கிய பிரச்னையை நீங்கள் அடையாளம் கண்டுவிட்டீர்கள். இந்த நிலை மாறுவதற்கான போராட்டம் தொடங்கியுள்ளது. சகிப்புத்தன்மை, சிறுபான்மையினர் உரிமை, ஒற்றுமை ஆகியவற்றைக் கோரி நாடு முழுவதும் உள்ள மக்கள் போராடிவருகின்றனர். ஒரு முனையில் சீனா போன்ற சர்வாதிகார நாடுகள் உள்ளன. மற்றொரு முனையில் ஜனநாயக நாடுகள் தங்களின் தவறுகளை தாங்களே திருத்திக் கொள்கின்றன. தன்னை தானே திருத்திக் கொள்ளும் குணம் இந்தியா, அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகளின் டிஎன்ஏக்களில் உள்ளது. இம்மாதிரியான பிரச்னைகளை சுதந்திரமான தேர்தல் மூலம் சரி செய்வோம். வன்முறையை கையில் எடுக்க மாட்டோம்" என்றார்.
இதையும் படிங்க: நேபாளம் எல்லையில் துப்பாக்கிச்சூடு: இந்தியர் பலி!