இந்திய-சீன எல்லைப்பகுதியில் கடந்த மே மாதம் முதலே பதற்றம் நிலவிவருகிறது. இந்திய எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிக்க சீன ராணுவம் முயல்வதாக இந்தியா குற்றஞ்சாட்டியது.
குறிப்பாக, ஜூன் 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் சீனா ராணுவத்தின் வீரர்களும் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
எல்லையில் ஏற்பட்டுள்ள இந்த பதற்ற நிலையை தணிக்க இருநாட்டின் ராணுவ உயர் அலுவலர்கள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், எல்லையில் உள்ள நிலைமையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், லடாக்கில் இந்திய-சீன எல்லையைத் தாண்டி வந்த இந்திய வீரர்கள், பாங்கோங் ஏரி சமவெளி பகுதிகளில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக சீன ராணுவத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் ஒருவர் கூறுகையில், "இந்திய வீரர்கள் சட்ட விரோதமாக எல்லையை கடந்து பாங்கோங் ஏரியின் தென் கரைக்கு அருகிலுள்ள ஷென்பாவ் மலைப் பகுதிக்குள் நுழைந்துள்ளனர்.
இந்தியாவின் இந்த நடவடிக்கை இரு தரப்பு ஒப்பந்தங்களை கடுமையாக மீறும் வகையில் உள்ளது. இது எல்லையில் இருக்கும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. சீன ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது.
எனவே நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது" என்று தெரிவித்தார். இருப்பினும் என்ன மாதிரியான பதில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து அவர் எதுவும் விளக்கவில்லை.
மேலும், "எல்லையில் ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இந்தியா உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். எல்லைக்கோட்டை கடந்த வீரர்களை உடனடியாக இந்தியா திரும்பப்பெற வேண்டும். மேலும், எச்சரிக்கும் வகையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
எல்லைப் பகுதியில் துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்று இரு நாடுகளுக்கும் இடையே 1996ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்க்கது.
எல்லையில் இந்திய-சீனா பாதுகாப்புப் படையினருக்கு இடையே இதற்கு முன் கடைசியாக கடந்த 1967ஆம் ஆண்டு துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. சிக்கிம்மில் உள்ள எல்லைப்பகுதியில் நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 80 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அதேநேரம் சீனாவைச் சேர்ந்த சுமார் 400 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: மீண்டும் சீனா அத்துமீறல்! ஐந்து இந்தியர்களைப் பிடித்துச் சென்ற சீன ராணுவம்