உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலன் மாவட்டத்தை அடுத்த ஆட்டா கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த சனிக்கிழமையன்று இரவில் வெளியே சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால், அச்சமடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் சிறுமியை காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஞாயிறு அன்று ஜான்சி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், அச்சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து, கண்கள் தோண்டியெடுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார்.
இதையடுத்து காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனை தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி கொலை செய்த ரஞ்சித் அஹிர்வார் என்ற இளைஞரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இளைஞர் மீது ஏற்கனவே பல்வேறு பாலியல் வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.