அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பு வரும் 13ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு, சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாகச் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வீட்டில் சமுதாய நல்லிணக்க ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கிருஷ்ண கோபால், ராம்லால், முன்னாள் மத்திய அமைச்சர் ஷா நவாஸ் உசேன், இஸ்லாமிய மத குருக்கள், கல்வியாளர்கள், முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அயோத்தியாவில் அமலுக்கு வருமா தேசிய பாதுகாப்புச் சட்டம்?
நாட்டில் எந்தச் சூழ்நிலையிலும் சமூக, மத நல்லிணக்கம், சகோதரத்துவம், ஒற்றுமையைக் காப்பதுடன் அதை மேலும் பலப்படுத்தும் வகையில் செயல்படுவது என இந்தக் கூட்டத்தில் உறுதி எடுத்துக் கொண்டனர். சுயலாபத்துக்காகச் சதிச் செயலில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்து மக்கள் அறிந்து விழிப்புடன் இருக்க வேண்டும் எனக் கூட்டத்தில் பங்கேற்ற இரு தரப்பினரும் வேண்டுகோள்விடுத்தனர்.
இந்தக் கூட்டத்தில் ஜமாத் உலாமா இ ஹிந்த் பொதுச் செயலாளர் மஹ்மூத் மதானி, முன்னாள் எம்பி ஷாகித் சித்திக், ஷியா பிரிவு மதகுரு கல்பே ஜாவத் உள்ளிட்ட இஸ்லாமிய மதத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.