இது தொடர்பாக இன்று (நவ. 12) ஊடகங்களைச் சந்தித்துப் பேசிய அவர், "பாஜகவின் பிகார் தேர்தல் பொறுப்பாளராக இருந்ததை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.
பிரதமர் மோடியை நம்பி பிகார் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்தனர். முதலமைச்சர் நிதிஷ் குமாரின் நல்ல பிம்பமும் எங்களுக்கு உதவியது.
லோக் ஜனசக்தி கட்சி (எல்.ஜே.பி.) என்.டி.ஏ. கூட்டணியில் இல்லை. நாங்கள் அவர்கள் இல்லாமலேயே ஒரு தெளிவான பெரும்பான்மையைப் பெற்றுள்ளோம். எங்கள் கூட்டணி அரசை அமைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் மகாராஷ்டிர அரசியலில் இனிவரும் காலங்களில் பெரும் தாக்கம் செலுத்தும். மகாராஷ்டிராவின் அரசியல் சூழலோடு அதனைப் பொருத்திப் பார்த்தால், அது எங்கள் நம்பிக்கையை உயர்த்தியுள்ளது.
மேலும், பிகார் தேர்தல் வெற்றியானது தேசிய அரசியலிலும், மேற்கு வங்கத்திலும் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மகாராஷ்டிராவை ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு நீண்ட காலம் தொடர முடியாது. இந்த அரசு வீழ்ச்சியடையும்போது, நாங்கள் ஒரு மாற்று அரசை தோற்றுவிப்போம்.
ஆனால், இப்போது எங்களுக்கு ஆட்சியைப்பிடிப்பது முக்கியமான விஷயமில்லை.
எங்கள் முன்னுரிமை என்பது மகாராஷ்டிராவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் விவசாய நெருக்கடி நிலவுகிறது. விவசாயிகள் கவலைப்படுகிறார்கள். அரசு நெருக்கடியில் உழன்றுவரும் அவர்களுக்கு போதிய நிதி உதவிகளை வழங்கவில்லை.
ஒரு எதிர்க்கட்சியாக இருப்பதால், நாங்கள் விவசாயிகளுடன் இருக்கிறோம், அரசை கேள்வி கேட்கிறோம்" என அவர் கூறினார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 74, ஜே.டி.யூ. 43, விகாஷில் இன்சான் கட்சி 4, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 4 என 125 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெற்றது. ஆர்ஜேடி 75, காங்கிரஸ் 19, இடதுசாரிகள் 16 என மகா கூட்டணி 110 இடங்களைக் கைப்பற்றியது.