பாகிஸ்தானில் கடந்த 2014ஆம் ஆண்டு, முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இம்ரான் கான் அப்போதைய அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் நாடாளுமன்றம், பிரதமர் மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்றார்.
இந்த போராட்டம் 100 நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்தது. இஸ்லாமாபாத்தில் நடந்த உள்ளிருப்பு போராட்டத்தின்போது நாடாளுமன்ற வளாகத்தையும், பாகிஸ்தான் தொலைக்காட்சி கழகத்தின் அலுவலகத்தையும் தாக்கி சேதப்படுத்தியதாக தற்போதைய பிரதமர் இம்ரான் கான் மற்றும் முக்கிய எதிர்க் கட்சித் தலைவர்கள் மீது பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று(அக்-29) பயங்கரவாத தடுப்பு நீதிமன்ற நீதிபதி ராஜா ஜவாத் அப்பாஸ் ஹசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு அரசியல் அடிப்படையில் பதியப்பட்டது. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் இந்த வழக்கு உள்ளது என்று கடைசி விசாரணையில் பிரதமர் இம்ரான் கான் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் குற்றமற்றவர் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அப்போது கைது செய்யப்பட்ட ஆரிஃப் ஆல்வி தற்போது பாகிஸ்தான் அதிபராகப் பதவி வகிப்பதால் அவருக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த நீதிமன்றம் முடிவு செய்ததுள்ளது.