நாடாளுமன்ற கூட்டத்தொடரில், தருமபுரி மக்களவை உறுப்பினா் செந்தில்குமார் கலந்துக்கொண்டு பேசினார். அவர் பேசியதாவது: தருமபுரி மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. நிலத்தடி நீர் முற்றிலுமாக குறைந்துவிட்டது. நீர்ப்பாசன வசதிகள் எதுவும் இல்லை. இதனால், வேளாண் தொழிலில் உதவியாயிருக்கும் கால்நடைகள் போதிய தண்ணீரின்றி தவிக்கின்றன. இதனை சரி செய்ய 3 நீா் திட்டங்கள் உள்ளன.
முதலாவது நீர் திட்டம்:
தருமபுரி தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் பகுதியிலுள்ள காவிரி ஆற்றில் கிடைக்கும் கூடுதல் தண்ணீரை, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள குழாய்களை பயன்படுத்தி புதிய கால்வாய்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். இதனால், அப்பகுதிகளிலுள்ல ஏரிகளை நிரப்ப முடியும். இதனால் நிலத்தடி நீர் மட்டமும் உயரும். எண்ணற்ற கிராம மக்களின், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை முற்றிலுமாக பூர்த்தி செய்திட முடியும்.
இரண்டாவது நீர் திட்டம்:
தென்பெண்ணையாறு தண்ணீரைக் கொண்டு தூள்செட்டி ஏரியை நிரப்புவது. இதற்காக, 2015ஆம் ஆண்டு, 68 ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் கையகப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. ஆனால், அவை இன்னமும் வெறும்காகிதத்தில் மட்டுமே இருக்கிறது. ஐந்தாண்டுள் ஆகியும் எவ்வித மாற்றமுமில்லை. இத்திட்டத்தை நிறைவேற்றினால், பாலக்கோடு, காரிமங்கலம், தர்மபுரி ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட ஆயிரத்து 500 ஏக்கா் பரப்பளவு பகுதிகள் பாசன வசதிபெறும்.
மூன்றாவது திட்டம்:
எண்ணேகோல் புதூர் நீர் திட்டம். இத்திட்டம் மூலம் கிருஷ்ணகிரியிலிருந்து, காரிமங்கலத்திற்கு, தண்ணீர்கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதை நிறைவேற்றித் தர வேண்டுமென்பது, இப்பகுதிமக்களின், நீண்டகால கோரிக்கை. மத்திய அரசு தமிழக அரசிடம் விரைந்து பேசி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
இதையும் படிங்க: ’கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்தம் உறுதி’ - துப்புரவுப் பணியாளர்கள்