மறதி நோய் எனப்படும் அல்சைமர் நோய் முதியவர்களை அதிகம் தாக்கக்கூடியது. மூளையின் செல்களை சிதைத்து படிப்படியாக ஞாபக மறதியை ஏற்படுத்துவது இந்த நோயின் பாதிப்பாகும்.
இந்நிலையில், அல்சைமர் நோயுடன் தொடர்புடைய குறுகிய கால நினைவக இழப்புகளைத் தடுக்க அல்லது குறைக்க உதவும் புதிய வழிகளை, அதன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக இந்திய தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது. அல்சைமர் நோய் காரணமாக குறுகிய கால நினைவாற்றல் இழப்புடன் தொடர்புடைய மூளையில், நியூரோடாக்ஸிக் மூலக்கூறுகள் குவிவதைத் தடுக்க "ட்ரோஜன் பெப்டைடுகளை" பயன்படுத்துவதற்கு ஆராய்ச்சிக் குழு முன்மொழிந்துள்ளது.
இந்த முறையைப் பயன்படுத்துவதால் 10 ஆண்டுகள் வரை அல்சைமர் நோய் வருவதைத் தாமதப்படுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மின்னணு மற்றும் பொறியியல் பேராசிரியர் ஹர்ஷல் நேமேட் கூறுகையில், ”இந்த குறிப்பிட்ட சாதனத்தைப் பயன்படுத்தும்போது அல்சைமர் பாதிப்பு ஏற்படுவதை தாமதப்படுத்த முடியும். இதற்கான சோதனை இன்னும் நிறைவடையவில்லை. பரிசோதனை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது” என்றார்.
உயிர் தொழில்நுட்ப பேராசிரியர் வி.ராமகிருஷ்ணன் கூறுகையில், “தற்போது எலிகள் மீதும், விலங்குகள் மீதும் சோதனை நடைபெற்றுவருகிறது. இது முடிவடைந்ததும் மனிதர்கள் மீது சோதனை நடைபெறும். இதில் நாங்கள் வெற்றி பெற்றால் மட்டுமே மனிதர்கள் மீது இதனை பயன்படுத்த முடிவு செய்வோம்” என்றார்.
இதையும் படிங்க:கோவிட்-19 எதிரான ஆயுர்வேத மருந்தை உருவாக்கி வரும் இந்தியா!