இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவருவதால் மத்திய, மாநில அரசுகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரித்துவருகிறது.
முன்னதாக பிசிஆர் சோதனையை மேற்கொண்டுவந்த நிலையில், தொற்றுகளை விரைவில் கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ரேபிட் கிட்டின் மூலம் பரிசோதனைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தியது.
பின்னர், ரேபிட் கிட்களின் மூலம் எடுக்கப்பட்டுவரும் பரிசோதனை முடிவுகள் பெரும்பாலானவை தவறான முடிவுகளை காட்டுவதால் ரேபிட் பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறும் கூறியது.
இந்நிலையில், டெல்லி ஐஐடியினர் மூன்று மாத முயற்சியில் கரோனா வைரஸை கண்டறியும் கருவியினை கண்டறிந்துள்ளனர். இந்த பரிசோதனைக் கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்சசிக் கழகமும் அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து பேசிய டெல்லி ஐஐடியின் பேராசிரியர் வி. பெருமாள், ”கரோனா வைரஸைக் கண்டறியும் கருவியைக் கண்டறிய நாங்கள் ஜனவரி மாதத்திலிருந்தே முயற்சி செய்தோம். இந்தக் கருவி அதிக அளவு சோதனைகளை மேற்கொள்ளுமாறும், மலிவு விலைகளில் கிடைக்கும் பொருட்டும் அமையவேண்டும் என எண்ணிணோம்.
உமிழ்நீர் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளும் இந்தக் கருவி தற்போது பயன்படுத்திவரும் அனைத்து சாதனங்களைவிடவும் மலிவான ஒன்று. இதன் உற்பத்தி செலவும் குறைவு.
டெல்லி ஐஐடியின் கட்டுப்பாட்டிலுள்ள குசுமா ஸ்கூல் ஆஃப் பயோலாஜிக்கல் சயின்ஸ் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட கோவிட் -19 பரிசோதனைக் கருவிக்கு கடந்த வியாழக்கிழமை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தக் கருவியின் நூறு விழுக்காடு உணர்திறனையும், தனித்தன்மையும் பரிசோதிக்கப்பட்டுள்ளது. பி.சி.ஆர் அடிப்படையிலான நோய் கண்டறியும் மதிப்பீட்டிற்கு ஒப்புதல் பெற்ற முதல் கல்வி நிறுவனம் டெல்லி ஐஐடிதான்.
இந்தக் கருவியின் மூலம் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளுக்கு ஃப்ளோரசன்ட் ஆய்வுகள் தேவையில்லை என்பதால் முடிவுகள் விரைவில் தெரியவரும். இந்தக் கருவி விரைவில் பயன்பாட்டிற்கு வரும்” என்றார்.
இதையும் படிங்க:கரோனா வைரஸுக்கு எதிரான போரில் அரசுக்கு உதவ களமிறங்கும் ரோபோக்கள்!