ஜம்மு-காஷ்மீர் காவல் துறைத் தலைமை இயக்குநர் (DGP) தில்பாக் சிங் பெயரில் இயங்கும் போலி ட்விட்டர் கணக்கில், காவல் துறைத்தலைவர் (IGP) பசந்த் ரத் புத்தகங்களை வழங்கி, மக்களுக்குத் தன் கடனை அடைத்து வருவதாக ட்வீட் செய்யப்பட்டிருந்தது.
இதற்குப் பதில் ட்வீட் செய்த காவல் துறைத்தலைவர் (IGP) பசந்த் ரத், "தில்பாக் சிங் அவர்களுக்கு வணக்கம். உங்களை நான் தில்லோ என்று அழைக்கலாமா? சரோரே நகரில் பல் மருத்துவக் கல்லூரி அருகே 50 காணி நிலம் வைத்திருப்பது நீங்களா? அந்த நிலம் உங்கள் பெயரில் பதிவிடப்பட்டுள்ளதா?" எனச் சூசகமாகச் சாடினார்.
இதனைக் கண்ட காஷ்மீரிகள் கண்டிப்பாக, காவல் துறைத் தலைமை இயக்குநர் (DGP) தில்பாக் சிங்கை தான், அவர் குத்திக்காட்டிப் பேசினார் என்பதைக் கணித்துவிட்டனர்.
இந்நிலையில், இதனை உறுதி செய்யும் விதமாக காவல் துறை அலுவலர்கள் இருக்கும் வாட்ஸ்அப் குழு ஒன்றில் பதிவிட்டுள்ள காவல் துறைத் தலைமை இயக்குநர் (DGP) தில்பாக் சிங், "பினாமி பேரில் நானோ, என் குடும்பத்தாரோ சட்டவிரோதமாக பிசினஸ், நிலம், சொத்து, வைத்திருந்தால், நிரூபித்துக்காட்டுமாறு பசந்த் ரத்திற்கு நான் சவால் விடுகிறேன்" எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து, தில்பாக் சிங்குக்கு ஆதரவாகப் பேசிய காஷ்மீர் காவல் துறைத் தலைவர் விஜய் குமார், " பசந்த் இதுபோன்ற ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்வதால், காவல் துறையினருக்கு அவப் பெயர் உண்டாகக்கூடும். அவரிடம் ஆதாரம் இருந்தால் உரிய இடத்தில் புகார் செய்யட்டும். சிறப்பாக பணியாற்றக்கூடியவர் தில்பாக் சிங். அவரது திறனையும் பணியையும் நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்" எனக் கூறியுள்ளார்.
இதனிடையே, மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான குர்ஷீத் அலாம், காவல் துறைத் தலைவர் பசந்த் ரத் தன்னை மிரட்டியதாகப் புகார் அளித்துள்ளார்.
இது போன்று காவல் துறைத்தலைவர் பசந்த் ரத் அதிகார மோதலில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு காவல் துறை தலைமை இயக்குநர் வைதுடன், மோதலில் ஈடுபட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க : கரோனாவால் சீனா தலைநகரில் மீண்டும் ஊரடங்கு