கலாச்சார துறை அமைச்சர் ஏ.கே.பாலன் கூறுகையில், 'திருவனந்தபுரத்தில் கேரள சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 3ஆவது வாரத்தில் நடைபெறும்.
ஆனால் கரோனா பரவல் காரணமாக இந்தத் திரைப்பட விழாவும் தள்ளி வைக்கப்பட்டது. டிசம்பரில் நடைபெற வேண்டிய 25ஆவது கேரள சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வழக்கத்தை விட மாறாக இம்முறை கேரளாவில் 4 நகரங்களில் திரைப்பட விழா நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் தவிர எர்ணாகுளம், பாலக்காடு மற்றும் கண்ணூர் ஆகிய நகரங்களில் விழா நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு இடங்களிலும் 5 திரையரங்கங்களில் படங்கள் திரையிடப்படும். திருவனந்தபுரத்தில் பிப்ரவரி 10 முதல் 14ஆம் தேதி வரையும், எர்ணாகுளத்தில் 17 முதல் 21ஆம் தேதி வரையும், பாலக்காட்டில் 23 முதல் 27ஆம் தேதி வரையும், கண்ணூரில் மார்ச் 1 முதல் 5ஆம் தேதி வரையும் விழா நடைபெறுகிறது.
ஒவ்வொரு திரையரங்கத்திலும் அதிகபட்சமாக 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். வழக்கமாக இந்த விழாவுக்குக் கட்டணமாக ஒருவருக்கு ரூ 2,000 வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை கட்டணம் குறைக்கப்பட்டு 750 ரூபாயும், மாணவர்களுக்கு 400 ரூபாயுமாக வசூலிக்கப்படுகிறது.
ஒவ்வொரு நிகழ்ச்சியின் பின்னர் திரையரங்குகள் கிருமிநாசினி கொண்டு சுத்திகரிக்கப்படும். கரோனா வழிகாட்டு நெறிமுறைகள், விதிமுறைகளைக் கடைப்பிடித்து இவ்விழா நடைபெறும்' என்றார்.
கேரளாவில் ஜனவரி 5ஆம் தேதி முதல் திரையரங்குகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதி அளித்துள்ள அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
அதுதவிர, ஜனவரி 5ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள், கலை நிகழ்ச்சிகள், பொதுநிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.