விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தை வருகிற 2022ஆம் ஆண்டு இஸ்ரோ செயல்படுத்தவுள்ளது. இதற்கென வீரர்களை தேர்வு செய்யும் பணியை இந்திய விமானப்படை தற்போது தொடங்கியுள்ளது. ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் இரண்டு ஆளில்லா விண்கலன்களும், மனிதர்களைக் கொண்டு செல்லும் ஒரு விண்கலமும் தயாரிக்கப்படவுள்ளன. இதற்காக ரஷ்யா, பிரான்சுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ககன்யான் திட்டத்திற்காக மாஸ்கோவில் இஸ்ரோவின் தொழில்நுட்ப மையம் அமைப்பதற்கான அனுமதியை மத்திய அமைச்சரவை கடந்த மாதம் வழங்கியுள்ளது.
இதற்காக வீரர்களுக்கு தீவிர உடற்திறன் சோதனை, மருத்துவ பரிசோதனை மற்றும் மனோதிட சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் இன்று நடத்தப்பட்டன. இதில் மொத்தம் 30 வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தேர்வானவர்களில் 3 வீரர்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டு, அந்த வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்படும் என கூறப்படுகிறது. வீரர்களுக்கு நடந்த உடல்தகுதி சோதனையை இந்திய விமானப்படை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது.
சமீபத்தில், ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த பின் அளித்த பேட்டியில், ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் இந்திய விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யா பயிற்சி வழங்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.