17ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று மாலை ஆறு மணியோடு முடிவடைந்தது. இத்தேர்தலில் யார் எந்தக் கூட்டணி வெற்றிப்பெற போகிறது என்பது குறித்து தேர்தலுக்கு பிந்தைய கணிப்புக்களை பல்வேறு தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.
இந்த கணிப்புக்களில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என்று கூறியுள்ளன.
இதுகுறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்னும் வதந்தியை நான் நம்பமாட்டேன். இந்த வதந்திகள் மூலம் ஆயிரக்கணக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் திருத்தம் செய்து அல்லது அவற்றுக்குப் பதிலாக வேறு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றும் செய்வதற்கான சதித் திட்டமாகும். எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒற்றுமையோடு, வலிமையோடு, தைரியத்தோடு இருக்க வேண்டும். இந்தப் போரை நாம் ஒன்றுகூடி எதிர்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இவரைப் போன்று ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், " தேர்தலுக்கு பிந்தைய கணிப்புக்கள் எப்போதும் தவறாகவே அமையும் என்று சொல்ல முடியாது. தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு, சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறுங்கள். மே 23ஆம் தேதி, உலகம் அதனுடைய அச்சில் சுற்றுகிறதா என்று பார்ப்போம்" எனத் தெரிவித்துள்ளது.