கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பாதிப்புகள் தீவிரமடைந்து வருகின்றன. பல்வேறு நாடுகளிலும் மார்ச் மாதத்திற்கு பின்னர் ஊரடங்கு விதிக்கப்பட்டதால், நிறுவனங்கள் வருவாய் இன்றி ஊழியர்களை பணியிலிருந்து நீக்கினர்.
இந்தியாவிலும் வேலை இல்லாததால் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பினர். ஐடி நிறுவனங்கள் பலவும் தங்களது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தபடியே பணி செய்ய அறிவுறுத்தியது. இதே நிலை தான் வரும் டிசம்பர் மாதம் வரையில் தொடரும் என்பதால், மக்கள் பலரும் தங்களது சொந்த மாநிலங்களிலேயே இருக்கின்றனர். இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள முக்கிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போரின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது.
இது குறித்து சான்ஸ்கிருதி குடியிருப்பு சங்கத்தின் தலைவர் மேட்டு பால்ரெட்டி பேசுகையில், ''கரோனாவால் பல ஊழியர்களும் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இதனால் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. இந்த காரணத்தால் குடியிருப்புக்கான பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளன. சாதாரணமாக பராமரிப்பு செலவுகள் ரூ.1 கோடி வரை வரும். இதனை குடியிருப்பில் வசிப்பவர்களிடம் வாங்கி கொடுப்போம். இப்போது வசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், நிர்வாகத்திற்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பலரும் டிசம்பர் மாதத்திற்கு பின்னரே, வருவதாகக் கூறியுள்ளனர். அதில் சிலர் மட்டுமே வாடகைக் கொடுக்கின்றனர்'' என்றார்.
இதே நிலைமை தான் சென்னை, டெல்லி, கொல்கத்தா, பெங்களுரு உள்ளிட்ட பெருமாநகராட்சிகளிலும் மாவட்டங்களிலும் நீடிக்கிறது.
இதையும் படிங்க: 'உலக புலிகள் எண்ணிகையில் 70% விழுக்காடு இந்தியாவில் உள்ளது' - பிரகாஷ் ஜவடேகர்