தமிழ்நாட்டில் ஆடி மாதம் பண்டிகை மாதமாக கொண்டாடுவதைப்போல, தெலங்கானா மாநிலத்தில் ஆஷாதா மாதத்தினை பண்டிகை மாதமாக அம்மாநில அரசு 2014ஆம் ஆண்டு அறிவித்தது. பண்டிகை மாதம் என்பதால் அந்த மாதம் 'ஆஷாதா ஜதாரா' என்றும் அழைக்கப்படுகிறது.
அம்மாதத்தில் முக்கியப் பண்டிகையாக விளங்குவது மகா காளியின் பொனாலு திருவிழா!
'பொனாலு' என்ற சொல் சமஸ்கிருத வார்த்தையான ‘போஜனம்’ என்பதிலிருந்து உருவானது, இது தெலுங்கில் உணவு அல்லது விருந்து என்று கூறப்படுகிறது. இந்த உணவு, அம்மாநில பாரம்பரியமான வான பானையில் வைக்கப்படுகிறது, பின்னர் இது மகா காளி தேவிக்கு படைக்கப்படுகிறது.
காக்கும் தெய்வமாக வணங்கப்படும் மகா காளிக்கு, மக்கள் தங்களது நன்றியினை தெரிவிக்கும்விதமாக தெலங்கானாவிலுள்ள அனைத்து காளி கோயில்களிலும் பொனாலு பண்டிகையை கொண்டாட அம்மாநில மக்கள் சிறப்பு ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.
இம்மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மகா காளிக்கு சிறப்பு அலங்காரங்களும், பூஜைகளும் நடைபெறும். இப்பண்டிகையின் முதல், நான்காம் நாள் எல்லம்மா தேவிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.
இத்திருவிழா செகந்திராபாத்தில் உள்ள உஜ்ஜெய்னி மகா காளி கோயில், பால்காம்பேட்டில் உள்ள எல்லம்மா கோயிலில் ஜூலை 21ஆம் தேதியும், லால் தர்வாசாவின் மாதேஸ்வரி கோயிலில் உள்ள போச்சம்மா, கட்ட மைசம்மா கோயிலில் ஜூலை 28ஆம் தேதியன்றும் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொனாலு பண்டிகையின்போது போச்சம்மா, எல்லம்மா, அங்கலம்மா, பெத்தம்மா, மாரம்மா, டோக்கலம்மா, போலரம்மா, நூக்கலம்மா உள்ளிட்ட பெயரால் மகா காளி பல்வேறு வடிவங்களில் வழிபடப்படுகிறது.
திருவிழாவின் பின்னணி:
மகா காளி ஆஷாதா மாதத்தில் தனது தாய்வழி வீட்டிற்கு வருவதாகக் கூறப்படுகிறது. தெய்வத்தின் மீதான தங்கள் அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தும் விதமாக உள்ளூர் மக்கள் பாரம்பரிய பாடல் பாடி நடனம் ஆடுவது வழக்கம். மேலும், பானைகள், வளையல்கள், புடவைகள், உணவுகளை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கி மகிழ்கின்றனர்.