மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞர் ஒருவர், கரோனா அச்சம் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள உசேன் சாகர் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து ராம்கோபால்பேட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாபு கூறியதாவது, "ஒரு வாரத்திற்கு முன்பு அவர் ஒரு தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்றுவந்தார். பின்னர் அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இவரை பரிசோதித்த மருத்துவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து தனியார் மருத்துவமனைக்கு அந்த இளைஞர் சென்றுள்ளார். ஆனால், அந்த மருத்துவமனையில் படுக்கைகள் ஏதுமில்லை என மருத்துவ நிர்வாகம் அவரிடம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை தனக்கு மூச்சுத் திணறல் இருப்பதாக அவர் புகார் கூறியுள்ளார். இதையடுத்து அவர் தனது நண்பரிடம் தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி வற்புறுத்தியுள்ளார். ஆட்டோவில் பயணித்தபோது உசேன் சாகர் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டு, உடற்கூராய்வு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. கரோனா பாதிப்பு அச்சத்தால் அந்த இளைஞர் தற்கொலை செய்துள்ளார்" இவ்வாறு காவல் ஆய்வாளர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் கரோனாவால் மேலும் 28 பேர் உயிரிழப்பு!