கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள நான்காம் கட்ட ஊரடங்கு வரும் ஞாயிற்றுக் கிழமையுடன் முடிவடையவுள்ளது. இருந்தபோதிலும், நாட்டில் நாளுக்கு நாள் கரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்துவருகிறது.
இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், மாநிலத்தில் கரோனா வைரஸின் தாக்கம் குறித்தும், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் குறித்தும் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.
ஊரடங்கு முடிவிற்கு வரும் சில நாள்களுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி வழக்கமாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துவார். ஆனால், இந்ந முறை உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனையின்போது, பல்வேறு மாநில முதலமைச்சர்களும் மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்காதவண்ணம் தளர்வுகளுடன் ஊரடங்கினை அமல்படுத்துமாறு கூறியதாக தெரிகிறது. இதையடுத்து இன்னும் மூன்று நாள்களுக்குள் ஊரடங்கினை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே 31ஆம் தேதிக்குப் பின் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், தடைகள் தொடரும் துறைகள், பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்கள் திறப்பு, சந்தைகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உணவகங்கள், நட்சத்திர விடுதிகள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள், அரசியல் கூட்டங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், மதம் சார்ந்த விழாக்கள் ஆகியவை குறித்தும் ஏதேனும் அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: 'ஊரடங்கு தளர்வைப் பயன்படுத்தி மக்கள் வெளியே வர வேண்டாம்'