1889ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி அலகாபாத்தில் பிறந்தவர் ஜவஹர்லால் நேரு. 1919ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து, 1923இல் அகில இந்திய காங்கிரஸ் குழுவின் பொதுச்செயலாளர் ஆனார். இந்தியாவிற்கு அரசியலமைப்புக் கோரி கையெழுத்திட்ட தலைவர்களில் இவரும் ஒருவர்.
இந்த அறிக்கை 1928ஆம் ஆண்டு அனைத்துக் கட்சி மாநாட்டில் முன்மொழியப்பட்டது. இதன்பின்னர், காந்தி அழைப்புக்கு மரியாதை கொடுத்த ஜவஹர்லால் நேரு சுதந்திர இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார். இந்திய விடுதலைக்காக 1935களில் பலமுறை சிறைக்குச் சென்றுள்ளார்.
அவர் குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்ட காரணத்தினால், ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்தியா 1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்று ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை அடைந்தது.
மேலும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 1964ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி இயற்கை எய்தினார்.
இந்நிலையில், ஜவஹர்லால் நேருவின் 55ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி சாந்திவனத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இவர்களுடன் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து, மோடி ட்விட்டர் மூலம் ஜவஹர்லால் நேருவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.