இந்த கரோனா காலக்கட்டத்தில் தொழில்துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் நெருக்கடியில் சிக்கி, ஆட்குறைப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டன. ஆனால், இந்த வருடம் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை நாட்டில் 35 விழுக்காடு பணியமர்த்துதல் அதிகரித்துள்ளதாக லிங்க்ட்இன் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி "நாட்டில், பணியமர்த்துதல் மெதுவாக இயல்புக்கு திரும்பி வருகிறது. அதே சமயம் கரோனா பரவலுக்கு மத்தியில் வரும் காலங்களில் பணியமர்த்துதல் பெரிய அளவில் இருக்காது என்று கருதப்படுகிறது. ஆறு மாதங்களுக்கு முந்தைய சூழலுடன் ஒப்பிடும்போது வேலைகளுக்கான போட்டி இரு மடங்காக தற்போது அதிகரித்துள்ளது. ஒரு வேலைக்காக வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை ஜனவரி மாதத்தில் சுமார் 90இல் இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் 180ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை நாட்டில் 35 விழுக்காடு பணியமர்த்துதல் அதிகரித்துள்ளது.
கரோனாவால் ஏற்பட்ட வேலையிழப்பு காரணமாக மக்கள் பிற துறைகளில் வேலை தேடுவது 6.8 மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக மென்பொருள் பொறியாளர், வணிக மேம்பாட்டு மேலாளர், விற்பனை மேலாளர், வணிக ஆய்வாளர் மற்றும் கண்டன்ட் ரைட்டர் போன்ற வேலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து ஜூன் இறுதி வரை நடைபெற்ற பணியமர்த்துதல் குறித்து கணக்கிடப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.