இந்தியா - சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே கிழக்கு லடாக்கில் நடந்த மோதலில், 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் இருநாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சீனப் பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்கின்றன.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநில வாரணாசி பகுதியில் உள்ள தொழில் துறையினர் அனைவரும் சீனப் பொருள்களை 48 மணி நேரத்திற்குள் முழுமையாக காலி செய்து வைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த 48 மணி நேர காலக்கெடு இன்றோடு முடிவடைந்த நிலையில், ரவீந்திரபுரியில் உள்ள சீன உணவகத்தின் பெயர் பலகையில் இருந்த டிராகன் சின்னத்தில் கருப்பு மை அடித்தனர்.
இந்த செயல்களை விஷ்வ ஹிந்து சேனா அமைப்பின் நிறுவனர் அருண் பதாக் பேசுகையில், '' சீனப் பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளோம். நமது ராணுவ வீரர்கள் சீனாவைச் சேர்ந்தவர்களால் உயிரிழந்துள்ளனர். நமது எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர். 1962, 1967, டோக்லாம் என பல பிரச்னைகளை அவர்களால் நாம் எதிர்கொண்டு வருகிறோம்.
தற்போது கரோனா வைரஸைப் பரப்பியுள்ளார்கள். அதனால் கோடிக்கணக்கான மக்களின் உயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சீனாவின் சித்தாந்தங்கள், பொருள்கள் என அனைத்துவிதமான தீய நோக்கங்களையும் நாம் புறக்கணிக்க வேண்டும்'' என்றார்.