இமாச்சலப் பிரதேசம் சிர்மவுர் மாவட்டத்தைச் சேர்ந்த அறுபது வயது முதியவர் ராம்பாக். இதய நோயால் பாதிக்கப்பட்ட இவர் நீண்ட நாள்களாக இதற்கான சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தனது தந்தைக்குப் போதிய மருந்துப் பொருள்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ராம்பாக்கின் மகன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ராம்பாக்கின் மகனிடம் தொடர்புகொண்ட மாவட்ட ஆட்சியர் ஆர்.கே. பருதி, மருந்துப் பொருள்கள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். அதேசமயத்தில், ராம்பாக் வசித்துவரும் பகுதியிலுள்ள காவலர் ஒருவரையும் தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிவித்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், காவலர் ஒருவர் 160 கி.மீ. பயணித்து அவருக்குத் தேவையான மருந்துப் பொருள்களை அளித்தார்.
இச்சம்பவம் குறித்த தகவலினை மாவட்ட ஆட்சியர் நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் தெரிவித்தார். மேலும், இந்த மருந்துப் பொருள்களுக்காகப் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து எவ்வித பணமும் வாங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நோயாளிக்கு மருந்தளிக்க 150 கி.மீ பயணித்த நபர்!