இமாச்சலப்பிரதேச மாநிலம் கல்பாவைச் சேர்ந்தவர் ஷ்யாம் சரண் நெகி. 102 வயது முதியவரான இவர், 1951ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் இருந்து வாக்களித்துவருகிறார். இந்நிலையில் இன்று நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவில், இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள கல்பா என்னுமிடத்தில் அந்த முதியவர் தனது வாக்கினை பதிவு செய்தார்.
இவர் இதுவரை நடைபெற்ற 17 மக்களவைத் தேர்தலிலும், 14 சட்டப்பேரவை தேர்தல் என மொத்தமாக 31 தேர்தல்களில் வாக்களித்துள்ளார். ஜனநாயகக் கடமை ஆற்றுவதில் தீராத நம்பிக்கை கொண்ட சரண் நெகி, இதுவரை எந்தவிதமான தேர்தலிலும் வாக்குப்பதிவு செய்யத் தவறியதில்லை என்று கூறுகிறார்.
தள்ளாத வயதிலும் நாட்டிற்கான தலைவனை தேர்ந்தெடுக்க வாக்களித்து இந்த சரண் நெகி தாத்தா, இன்றைய இளைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் முன் உதாரணமாகவே இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.