நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. தினம்தோறும் ஆயிரக்கணக்கானோர் கரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில், ஹிமாச்சல் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை அச்சத்தின் காரணமாக குடும்பத்தினர் வாங்க மறுத்துவிட்டனர். இறுதியில் அந்நபருக்கான இறுதிச் சடங்கு மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில் நடைபெற்றது.
இது குறித்து தர்மஷாலாவின் தலைமை மருத்துவ அலுவலர் ஜிடி குப்தா கூறுகையில், “மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா குறித்த அச்சமும், களங்கமும் கரோனா பாதித்தவர்களின் உறவினர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், சுகாதாரத் துறையும், மாவட்ட நிர்வாகமும் கரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகளை செய்கின்றன. கரோனாவால் இறப்பவர்களின் உடலை குடும்பங்கள் வாங்க மறுக்கும் சம்பவங்களும் அதிகளவில் நடைபெறுகின்றன” என்றார்.
ஹிமாச்சல் பிரதேசத்தில் இதுவரை 9 ஆயிரத்து 556 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 76ஆக உள்ளது.