ஆந்திரப் பிரதேசம் மாநிலம் கிழக்கு கோதாவரியை அடுத்த ஏலூர் நகரில் கடந்த 4ஆம் தேதியன்று சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள், வேலை செய்து கொண்டிருந்தவர்கள் என பலரும் திடீர் திடீரென வலிப்பும், மயக்கமும் ஏற்பட்டு கீழே விழுந்தனர். தொடர்ந்து நான்கு நாள்களாக மர்ம நோயின் தாக்கத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுவரை இந்த மர்ம நோயால் ஆண்கள், பெண்கள், சிறார்கள் உள்ளிட்ட 505 பேர் பாதிக்கப்பட்டு, விஜயவாடா, குண்டூர் அரசு மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 332 பேர் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பி உள்ளனர்.
மர்ம நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனிடையே, இந்த மர்ம நோயின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்குழு, மகாராஷ்டிரா மாநிலம் புனே மருத்துவக் குழு, உலக சுகாதார அமைப்பின் சுகாதார ஆய்வுக் குழு என மூன்று குழுக்கள் ஏலூர் வந்து ஆய்வு மேற்கொண்டனர். இது தவிர மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பிலும் தனியே சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் அருந்திய உணவு, பால், தண்ணீர் மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டது. அவ்வற்றைக் கொண்டு எய்ம்ஸ் மருத்துவக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட ஆய்வில், பாதிக்கப்பட்டவர்களின் உடலில் காரீயம்-நிக்கல் நச்சு கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்த முழுமையான தகவலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்குழு அண்மையில் ஆந்திரப் பிரதேச அரசிடம் கையளித்தது. அதனடிப்படையில், ஆந்திரப் பிரதேச அரசு இன்று (டிச.8) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களால் கூடுதல் சோதனைகள் நடத்தப்படுகின்றன, விரைவில் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் உடலில் காரீயம்-நிக்கல் நச்சு கலந்திருப்பதே இந்த மர்மநோய்க்கு காரணமென கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், மத்திய நிறுவனங்கள் தங்களது அறிக்கைகளை சமர்ப்பித்த பின்னரே இந்த மர்ம நோய் பரவலுக்கான காரணம் என்ன என்பது குறித்த முழு விவரங்கள் வெளிவரும்.
பாதிக்கப்பட்டவர்களில் உடல்களில் உள்ள காரீயம்-நிக்கல் போன்ற நச்சு உள்ளடக்கம் எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து அறிய முழுமையான விசாரணை நடத்தப்படும். சிகிச்சை முறைகளை தொடர்ந்து கண்காணிக்க ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி அறிவுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்கள் நலமடைந்து வருகின்றனர். எனவே, மக்கள் யாரும் பீதி அடையத் தேவையில்லை.
எலுரு நகரத்திலும், டெண்டுலூர் கிராமப்பகுதியிலும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வட்டாரங்களைச் சுற்றி உள்ள குடிநீர் நீர்த்தேக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன” என குறிப்பிடத்தப்பட்டுள்ளது.
இந்நச்சு எவ்வாறு கலந்தது என்று கண்டறியப்படாத நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் முதுகுதண்டில் இருந்து இரத்த மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்ப்ட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 32 வயது விவசாயி மரணம்: முதற்கட்ட விசாரணையில் காவல்துறை