இந்தியாவில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெயிலின் ருத்ரதாண்டவத்தால் மக்கள் வெளியே நடமாட முடியாத சூழ்நிலையில் உள்ளனர். அதிகப்படியான வெயிலின் தாக்கம் காரணமாக ஒரு சில இடங்களில் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.
வடக்கு, மத்திய இந்தியாவில் வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயர்ந்துள்ளது. அதிகப்படியான வெயில் வாட்டி வதைத்தால், மக்கள் கடும் சிரமங்களை சந்தித்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் கடந்த செவ்வாய்க்கிழமை (மே.26) அன்று 50 டிகிரி செல்லியஸ் என்ற அதிகப்படியான வெப்பநிலை பதிவாகியுள்ளது. கங்காநகர் மாவட்டத்தில் 49.6 டிகிரி செல்சியஸ், பிகானேர் மாவட்டங்களில் 48.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. அதேபோல் பஞ்சாப் மாநிலம் பதிந்தாவில் 47.5 டிகிரி செல்சியஸ், டெல்லியில் 47.2 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ”வட இந்தியாவில் இன்று முதல் வெப்பநிலை குறையும். 28 முதல் 30 தேதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை மாலத்தீவு, கொமோரின் சில பகுதிகளிலும், தென்மேற்கு அரேபிய கடல் பகுதிகளிலும், அந்தமான் கடல் பகுதிகளிலும், தெற்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடாவின் சில பகுதிகளுக்கும் முன்னேற சாதகமான சூழ்நிலை நிலவுகிறது” என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:வெயிலில் தவித்த வனவிலங்குகள்... ஏர் கூலர் அமைத்த பூங்கா நிர்வாகம்!