இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 380 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்பின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 167ஆக உள்ளது.
பெருந்தொற்றான கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை முறையான மருத்துவச் சிகிச்சை முறை கண்டறியப்படவில்லை. மலேரியா, ஹெச்.ஐ.வி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளையே தேவைக்கேற்ப சோதனை முயற்சியாக மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் குறிப்பாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எனப்படும் மலேரியாவிற்கான மருந்தை நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு, இந்த மருந்தை கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது. இந்த மருந்தை பயன்படுத்துவதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து, நாடு முழுவதும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தின் பயன்பாடு மற்றும் இருப்பு குறித்த முழு விவரத்தையும் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: விதிகளை மீறி கிரிக்கெட் விளையாடிய பாஜக எம்பி