புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று சட்டப்பேரவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'புதுச்சேரியில் இதுவரை 3 பேர் கரோனா நோய் அறிகுறிகள் இருப்பதாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 'மாஹே' பகுதியில் கரோனாவில் பாதிக்கப்பட்டவருக்கு நேற்று எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை எனத் தெரிய வந்துள்ளது.
இதுவரை புதுச்சேரியில் 3 ஆயிரத்து 560 நபருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் வந்த முடிவுகளில் 3 ஆயிரத்து 444 பேருக்கு நோய் அறிகுறி இல்லை. இன்னும் 104 நபருக்கு நாளை பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வு காரணமாக கடைகள் திறக்கப்பட்டுள்ளன. முதல் நாள் மட்டுமே மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. அதற்கு அடுத்தடுத்த நாள்களில் இருந்து மக்களும் கட்டுப்பாடாக இருந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை தற்போது கடைபிடித்து வருகின்றனர். இது வரவேற்கத்தக்கது.
இதேபோல் மக்கள், அரசுக்கு மே17ஆம் தேதி வரை ஒத்துழைப்பு நல்க வேண்டும். கோவிட் குழு அனைத்து அரசுத் துறைகளும், அரசு ஊழியர்களும் நல்ல ஒத்துழைப்புடன் பணியாற்றி வருகிறார்கள்' எனத் தெரிவித்தார்.
மேலும், 'புதுச்சேரியில் மாம்பழம் விற்க வந்த தேனி மாவட்ட வியாபாரிக்கு கரோனா நோய் இருப்பதாக கண்டறியப்பட்டு தேனியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருடன் புதுச்சேரியில் தொடர்பில் இருந்த 5 வியாபாரிகளை கண்டறிந்து பரிசோதித்து தனிமைப்படுத்தியுள்ளோம்' என்றார்.
இதையும் படிங்க: கரோனா காலத்திலும் கலைக்கு ஓய்வில்லை... 2 ஆயிரம் ஓவியங்கள் தீட்டிய நெல்லை மாணவர்கள்!