பிகார் முசாபர்பூரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பிகார் மக்கள் காட்டாட்சியின் இளவரசரிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அம்மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். காட்டாட்சி திரும்புவது கரோனா தொற்று நோய்களுக்கு மத்தியில் மாநிலத்திற்கு இரட்டை தலைவலியைக் கொண்டுவரும் என்றும் கூறினார்.
இந்நிலையில், தேர்தல் பரப்புரைக்கு செல்வதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த ஆர்ஜேடி கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவிடம், காட்டாட்சியின் இளவரசர் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “அவர் நாட்டின் பிரதமர், அவர் எதையும் சொல்ல முடியும், அதற்கு நான் எதிர்வினையாற்ற விரும்பவில்லை. ஆனால் அவர் பிகார் மாநிலத்தின் வேலையின்மை குறித்தும், மற்ற மிக முக்கியமான பிரச்னைகள் குறித்தும் பேசியிருக்கலாம். பாஜக உலகின் மிகப்பெரிய கட்சி, அவர்கள் 30 ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் பிரதமர் பேசினால், பொதுமக்களுக்கு எல்லா செய்திகளும் சென்றடையும். அவர் தனிப்பட்ட தாக்குதல்களை தவிர்த்து மாநிலத்தின் வறுமை, தொழிற்சாலைகள், விவசாயிகள், வேலையின்மை போன்ற விஷயங்களில் பேசியிருக்க வேண்டும்." எனக் கூறினார்.