உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தை சேர்ந்த இளம்பெண், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அந்தப் பெண்ணுக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இக்குற்றச் சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு மாநில காவல் துறையிடம் இருந்து மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்றப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண் இறப்பதற்கு முன்பு அலிகாரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அங்கு சென்றுள்ள சிபிஐ குழு ஆதாரங்களை சேகரித்துவருகிறது. சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் சிபிஐ அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, அலிகார் மாவட்ட சிறையில் உள்ள குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் சிபிஐ குழு விசாரணை நடத்தவுள்ளது.
சிபிஐ குழுவினர் உயிரிழந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் அக்டோபர் 17ஆம் தேதி விசாரணை நடத்தப்பட்டது. முன்னதாக, கடந்த அக்டோபர் 15ஆம் தேதி கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த அக்டோபர் 13ஆம் தேதி பாலியல் வன்புணர்வு நிகழ்ந்த இடம், அந்தப் பெண் எரிக்கப்பட்ட இடம், அந்தப் பெண்ணின் வீடு ஆகியவற்றை விசாரணைக் குழு ஆய்வு மேற்கொண்டது.
இதையும் படிங்க: பட்டினியால் வாடும் இந்தியா - உலக பட்டினி அட்டவணை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்