உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற கிராமத்தில் 19 வயது மதிக்கத்தக்க பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தார்.
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் காவல்துறையினரே தகனம் செய்ததால் இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், இவர்கள் நால்வரும் ஹத்ராஸ் காவல்துறை கண்காணிப்பாளர் வினீத் ஜெய்ஸ்வாலுக்கு கடிதம் எழுதியுள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சந்தீப் கடிதத்தில், "பாதிக்கப்பட்ட பெண்ணும் நானும் நண்பர்களே. அவருடன் தொலைபேசியில் பேசுவது வழக்கமான ஒன்று.
எங்களுடைய நட்பை அவரின் குடும்பத்தார் தவறாக நினைத்தார்கள். பெண்ணின் தாயும் சகோதரருமே அவரின் இறப்புக்கு காரணம். சம்பவம் நடைபெற்ற அன்று பாதிக்கப்பட்ட பெண்ணை அவரின் தாயும் சகோதரரும் தாக்கினர்.
குற்றஞ்சாட்டப்பட்ட நானும் சரி மற்றவர்களும் சரி அவரைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தவுமில்லை தாக்கவும் இல்லை. தவறான குற்றச்சாட்டுகளால் எங்களை சிறையில் அடைத்துள்ளார்கள். முறையான விசாரணையை மேற்கொள்ள கோரிக்கை விடுக்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி உத்தரப் பிரதேச அரசு பரிந்துரை செய்துள்ளது.