காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் (பி.சி.சி) தலைவருமான வி.ஹனுமந்த ராவ்க்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டியின் ஆதரவாளர்களிடமிருந்து மிரட்டல் வருவதால், தனது உயிருக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி தெலங்கானா காவல் துறைத் தலைவர்(டிஜிபி) மகேந்தர் ரெட்டி கார்க்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், 'கடந்த டிசம்பர் 25 பிற்பகல் 3.30 தனக்குத் தெரியாத எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. அழைத்தவர் என்னை அவதூறாகப் பேசியதோடு, தகாத வார்த்தைகளைச் சொல்லித் திட்டினார். பின்னர் ரேவந்த் ரெட்டி தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவராக வருவதை, நான் ஏன் எதிர்க்கிறேன் என்று அவர் என்னிடம் கேள்வியைக் கேட்டார்.
ரேவந்த் ரெட்டியின் புகைப்படத்துடன், எனது புகைப்படத்தைச் சேர்ந்து தொலைப்பேசியில் பேசிய எனது உரையாடலை அந்த அடையாளம் தெரியாத நபர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து ஹைதராபாத் காவல் ஆணையரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
அவர் இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கும்படி என்னிடம் கூறியதையடுத்து, இதனைப் புகாராக எழுதிக் காவல் உதவி ஆணையரிடம் கொடுத்தேன். அவர் அதை இன்ஸ்பெக்டர் ரைதுர்காமிற்கு அனுப்பி விசாரிக்க உத்தரவிட்டார்' இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
காங்கிரஸின் மூத்த தலைவர் வி.ஹனுமந்த ராவ், 42 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் கட்சித் தரப்பில் பல தலைவர்களை எதிர்த்துள்ளார். ஆனால் அவரது வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு அச்சுறுத்தல்களைச் சந்தித்ததில்லை என்றும், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால், உரியப் பாதுகாப்பு வழங்கக் கோரியும், காவல் துறைத் தலைவர்(டிஜிபி) மகேந்தர் ரெட்டி காரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.