கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா, மாநிலத் தலைநகர் பெங்களூருவில் இன்று (ஜன19) செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு தகவல்கள் குறித்து பகிர்ந்துகொண்டார். “மாநில அமைச்சரவை விரிவாக்கம் குறித்து உள் துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நான்கு மணி நேரம் விரிவாக விவாதித்தேன். இந்தக் கலந்துரையாடல் நல்லவிதமாக அமைந்தது. மாநிலத்துக்கு பெருமளவு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் டாவோஸ் செல்கிறேன்.
அங்கு பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு பெங்களூரு திரும்பிய இரண்டு அல்லது மூன்று நாள்களில் அமைச்சரவையை விரிவாக்கம் செய்வேன்” என்றார். இதையடுத்து செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அந்தக் கேள்விகளும் அதற்கு பி.எஸ். எடியூரப்பா அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: மாநில அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக குழப்பங்கள் நிகழ்வதாகச் செய்திகள் வெளியாகின்றனவே?
பதில்: அது தவறு, பிரச்னைகள் எதுவும் இல்லை.
கேள்வி: டாவோஸிலிருந்து திரும்பிய பின்னர் அமித் ஷாவை சந்திப்பீர்களா?
பதில்: அமித் ஷாவை நான் சந்திப்பது இயல்பானது.
கேள்வி: டாவோஸ் மாநாடு பயணம் எவ்வாறு இருக்கும்?
பதில்: மாநிலத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் டாவோஸ் செல்கிறேன். ஏற்கனவே 38 தொழிலதிபர்கள், முதலீட்டாளர்களுடனான தொடர்புகள் சரிசெய்யப்பட்டுள்ளன. தொழிலதிபர்கள், முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் மாநில அரசின் அதிகார எல்லைக்குள்பட்டு வழங்குவேன். முதலீடு தொடர்பாக அவர்களுக்கு இருக்கும் அனைத்து சந்தேகங்களையும் நீக்குவேன். இந்த முயற்சிகளால் மாநிலத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இவ்வாறு செய்தியாளர்களின் கேள்விக்கு முதலமைச்சர் எடியூரப்பா பதிலளித்தார்.
முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா டாவோஸ் பயணத்தை முடித்துக்கொண்டு வருகிற 24ஆம் தேதி பெங்களூரு திரும்புகிறார். மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் உள்ளிட்ட மத்திய அரசின் அலுவலர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்தக் குழுவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான தூதுக்குழுவில் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய தொழில் துறை அமைச்சருமான ஜெகதீஷ் ஷெட்டர், தலைமைச் செயலர் டி.எம். விஜய பாஸ்கர், மாநில அரசின் உயர் அலுவலர்கள் இடம்பெறுகின்றனர்.
கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜே.டி.எஸ்), காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 11 பேர் பாஜக சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றிபெற்றுள்ளனர். இவர்களுக்கு அமைச்சரவையில் இடமளிப்பேன் என பி.எஸ். எடியூரப்பா ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளார்.
இது கட்சியில் நீண்டகாலமாக இருக்கும் சிலருக்கு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பி.எஸ். எடியூரப்பா அமைச்சரவையில் 18 அமைச்சர்கள் என மொத்தம் 34 பேர் உள்ளனர். இந்நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் என்பது பி.எஸ். எடியூரப்பாவுக்கு எளிதான காரியமாக இருக்காது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
இதையும் படிங்க: பதவி விலகி விடுவேன்' - எடியூரப்பா பேச்சால் பரபரப்பு!