ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிவு காரணமாக 11 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள காஸியாபாத் மாவட்ட நிர்வாகம் ரசாயனங்கள், எரிவாயு ஆலை உரிமையாளர்களுக்கு ஆலோசனைளைக் கூறியுள்ளது.
அதில், ரசாயனம், எரிவாயு ஆலை உரிமையாளர்கள் எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது, பணியிடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள், தொழிலாளர்கள் பாதுகாப்பு சம்பந்தமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என பல்வேறு ஆலோசனைகள் அடங்கியுள்ளன.
நாட்டின் முன்னணி பொதுத்துறை எரிபொருள் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய மூன்றும் காஸியாபாத் மாவட்டத்தில் தான் அமைந்துள்ளன. இதுதவிர, லோனி பகுதியில் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலைகளும் உள்ளன.
இந்நிலையில், “எளிதில் தீப்பற்றக் கூடிய ரசாயனங்கள் உள்ளிட்ட தொழிற்சாலை உரிமையாளர்கள், ஆலைகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் சார் ஆட்சியாளர்களிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” எனவும் மாவட்ட ஆட்சியாளர் அஜய் சங்கர் பாண்டே தெரிவித்தார். அபாயகரமான ரசாயனங்கள் கொண்டு செல்வதற்கான விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
இதையும் படிங்க: விஷவாயுக் கசிவு: விசாரணைக் குழுவை அமைக்க பிரதமரிடம் சந்திரபாபு நாயுடு கோரிக்கை!