கரோனா வைரஸ் நோய் காரணமாக மாநிலங்களவைத் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதனிடையே, பல்வேறு மாநிலங்களில் காலியாக இருக்கும் மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.
குஜராத்தில் நான்கு மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. இரண்டு இடங்களை கைப்பற்றிவிடலாம் என காங்கிரஸ் திட்டமிட்ட நிலையில், இந்த ராஜிநாமா மூலம் அந்த எண்ணிக்கை ஒன்றாக குறையவுள்ளது. 2017ஆம் ஆண்டுக்கு பிறகு, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 81லிருந்து 66ஆக குறைந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து மூன்றாவது சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரும் ராஜிநாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், நான்கில் மூன்று மாநிலங்களவை இடங்களை பாஜக கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது. மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஐந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜிநாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து, கட்சி எம்எல்ஏக்களை ராஜஸ்தான் மாநிலத்துக்கு காங்கிரஸ் அனுப்பியது. ராஜிநாமா செய்த பெரும்பாலான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.