கடந்த சனிக்கிழமை இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு 2019-20ஆம் ஆண்டுகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில் குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்து முன்னணி வகிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உணவுப் பொருள்களின் தர நிர்ணய ஆய்வினை மேற்கொண்டு வருகிறது.
இந்த அமைப்பு, உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு இந்த தர பட்டியலை வெளியிட்டுள்ளது. மனிதவளம் மற்றும் நிறுவனத்தின் தரவுகள், நுகர்வோர்களுடனான இணக்கம், உணவு சோதனை - உள்கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் நுகர்வோர் உள்ளிட்ட ஐந்து வெவ்வேறு அளவுகளின் கீழ் இந்த மூன்று மாநிலங்களும் முன்னிலையில் உள்ளதாக FSSAI இன் மூத்த அலுவலர் ஒருவர் ஈடிவி பாரத்திடம் தெரிவித்தார்.
நாட்டின் சிறிய மாநிலங்களில் கோவா, மணிப்பூர், மேகாலயாவும்; யூனியன் பிரதேசங்களில் சண்டிகர், டெல்லி மற்றும் அந்தமான் தீவுகள் முன்னிலை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உணவு பாதுகாப்பு தினத்தில், கரோனா பெருந்தொற்றின்போது “உணவுப் பாதுகாப்பு என்பது அனைவரின் வணிகம்” என்ற கருப்பொருளுடன், அனைவருக்கும் பாதுகாப்பான உணவு தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்யும் பொருட்டு சில முக்கிய திட்டங்களையும் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த குறிப்புகளையும் 'உண்ணும் உரிமை' (eat right) என்ற தலைப்பில் மின் கையேடாக வெளியிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டுவருவதால், உணவகங்கள் மற்றும் உணவு சேவை மற்றும் விநியோக நிறுவனங்களில் போதுமான முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்வதை உறுதிசெய்ய வேண்டும். சமூக ஊடகங்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு தளங்கள் மூலம் உணவுப் பாதுகாப்பை நாம் வலியுறுத்த வேண்டும் என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் ப்ரீத்தி சூடான் கூறியிருந்தார்.
உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக மாநிலங்களிடையே போட்டி உணர்வை உருவாக்க மாநில உணவு பாதுகாப்பு அட்டவணை நல்ல பலனை அளிக்கும் என்றும் அவர் கூறினார்.