தீபத்திருநாளாம் தீபாவளி பண்டிகை சனிக்கிழமை (நவ.14) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புத்தாடை, பட்டாசு, இனிப்புகள் என தீபாவளி பண்டிகை களைக்கட்டும். ஆனால், கரோனா காரணமாக இந்தாண்டு தீபாவளியெல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. கரோனாவை விரட்ட வேண்டும் எனப் போராடி தற்போது மக்கள் கரோனா உடன் வாழப் பழகிக் கொண்டு வருகின்றனர். இத்தகைய பிரச்னைகளால் இந்தாண்டு தீபாவளி கொண்டாடப் பலரும் கைகளில் பணமின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் 5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு, தீபாவளி பண்டிகை கால முன்பணமாக வட்டியில்லாமல் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.
இந்தத் தொகை தீபாவளி பண்டிகை முன்னதாகவே ஊழியர்களுக்கு வழங்கப்படும். பின்னர் 10 மாதம் தவணை முறையில் மாதம் ரூ.1,000 வீதம் பிடித்தம் செய்யப்படும். மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த பணம் பெய்ட் கார்டு ஆன்லைன் மூலம் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.