கரோனா தொற்றுப் பரவலுக்குப் பிறகு, முதன்முறையாக, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வருகிற ஜூன் 14 அன்று நடைபெறலாம் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், நாட்டில் வரி வசூல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இக்கூட்டம் நடைபெற உள்ளது.
மத்திய நிதி அமைச்சர் தலைமையில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சிலின் இக்கூட்டம், ஜூன் 14ஆம் தேதி காணொலி மாநாடாக நடைபெற உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 39ஆவது கூட்டத்தில் பொருளாதாரத்தில் கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், அத்தியாவசியமற்றப் பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களை அதிகரிப்பதற்கு நிதி அமைச்சகம் ஆதரவாக இல்லை என்றும், இவ்விகிதங்கள் அதிகரிக்கப்படுவது கரோனாவால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் மீள்வதற்கு மேலும் தடையாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.
எனினும், 40ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : சைரஸ் மிஸ்திரியின் பங்கு விவகாரம்: டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!