கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், பொருளாதாரம் பெரும் பாதிப்படைந்துவருகிறது. பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. உலகின் முன்னணி வன்பொருள் நிறுவனங்களில் ஒன்றான ஐபிஎம்மின் தலைமை நிர்வாக அலுவலர் அரவிந்த் கிருஷ்ணாவுடன் பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசியுள்ளார்.
அப்போது, இந்தியாவில் முதலீடு செய்ய சிறப்பான நேரம் இது, தொழில்நுட்ப துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை நாடு வரவேற்கிறது என மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "உலகம் பொருளாதார வீழ்ச்சியை அடைந்துவரும் அதே நிலையில், இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது. போட்டி நிறைந்த இடையூறுமிக்க உலகில் தற்சார்பு இந்தியா என்ற கொள்கையுடன் நாடு முன்னேறி வருகிறது. இதன்மூலம், விநியோக சங்கிலி மேம்படும். வீட்டிலிருந்து பணிபுரியும் முறை பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதற்கான உள்கட்டமைப்பு, இணை சேவை, சூழல் ஆகியவற்றை வழங்கி உறுதிப்படுத்துவதில் அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
75 விழுக்காடு ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய வைக்க ஐபிஎம் முடிவெடுத்துள்ளது. இதனால் ஏற்படும் சவால்கள் குறித்து பேசினோம். இந்தியாவில் ஐபிஎம் நிறுவனம் பெரிய அளவில் முதலீடு செய்யவுள்ளதாக அரவிந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்" என்றார்.
இதையும் படிங்க: மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்? 22ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் கூட்டம்!