'அதிகாரப் பகிர்வு' என்ற பரந்துபட்ட பார்வையிலேயே காந்தியின் விடுதலை குறித்த நோக்கமானது இருந்தது. இந்தியாவின் சுதந்திரம் ஒருசில அதிகார வர்க்கத்தினரின் கையில் சென்றடைவதற்கு காந்தி விரும்பவில்லை. சாமானிய மக்களுக்கான அதிகாரப் பகிர்வு என்பதே காந்தியப் பார்வையில் சுதந்திர சுயாட்சியாகக் கருதப்பட்டது.
இந்தியாவின் ஆன்மாவானது கிராமங்களில்தான் இருக்கிறது என்பதை பெரிதும் நம்பிய காந்தி, தனது சுயாட்சி கருத்துகளை கிராமங்கள் முழுவதும் பரப்பும் பணியை தொடர்ச்சியாக மேற்கொண்டார். காந்தியின் அரசியல், சமூக இயக்கங்களின் மையப்புள்ளியாக இருந்தவை இந்திய கிராமங்களே! கிராம சுயாட்சி கருத்தை முன்வைத்த காந்தி, இந்தியாவின் கிராமங்கள் தங்கள் தேவைகளை தன்னிறைவு செய்துகொள்ளும் திறன் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என விரும்பினார்.
![மகாத்மா காந்தி 150](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4174780_inm.jpg)
இந்தியாவின் சுதந்திரத்திற்கு கிராம சுயாட்சியே தொடக்கம் என்பதை பெரிதும் நம்பினார் காந்தி. 1942ஆம் ஆண்டு காந்தி எழுதிய அரசியல் கட்டுரையில், 'அரசியல், பொருளாதர அதிகாரத்தின் குவியல் சுயாட்சி அடிப்படை தன்மையையே சீர் குலைத்துவிடும். அதிகாரப் பரவலின் மூலம் கிராமங்களுக்கான அதிகாரத்தை நிலைநிறுத்துவதே சுதந்திரத்தை பாதுகாத்துவைக்கும். கிராம நிர்வாகத்தில், முடிவெடுக்கும் அதிகாரங்களை பெண்கள் நேரடியாக மேற்கொள்ளும் திறனானது உறுதிப்படுத்தப்படுகிறது. கிராம பஞ்சாயத்து முறை மூலம் பெண்கள், ஒடுக்கப்பட்டவர்கள், பொருளாதரா ரீதியாகப் பின்தங்கியவர்கள் என அனைவரும் அதிகார மையத்துக்குள் நுழையும் வாய்ப்பு கிட்டும். இது ஜனநாயகத்தையும், பொருளாதரச் சுதந்திரத்தையும் உருவாக்கும்' எனக் குறிப்பிட்டிருப்பார்.
![மகாத்மா காந்தி 150](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4174780_inmc.jpg)
இதன் காரணமாகவே குடிசைத் தொழில், கைவினைப் பொருட்களின் வளர்ச்சி குறித்து காந்தி அதிக கவனம் செலுத்தினார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு காந்தியின் கிராம பொருளாதாரக் கொள்கையானது ஆணிவேராக இருந்தது. உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் தன்னிறைவை கிராமங்கள் பெறுவதன் மூலம் வேலைவாய்ப்பு சிக்கல் எழாது. வேலைத் தேடி கிரமத்தினர் நகர்புறக்குடியேற்றம் மேற்கொள்ளவது தவிர்க்கப்படும்.
காந்தியின் வரிகளில் கூற வேண்டும் என்றால், தன்னிறைவு பெற்ற கிராமத்தில் உணவு, உடை, சுத்தமான குடிநீர், சுகாதாரம், இருப்பிடம், கல்வி, சமூக தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கும். இதுவே காந்தியின் கனவான கிராம சுயாட்சி (ஸ்வராஜியமாகும்)!