மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்தபின், அரசு சாரா அமைப்புகளுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் வெளிநாடுகளிலிருந்து வரும் நிதி உதவி குறித்து தீவிரமாக ஆராயப்பட்டது.
அதன் அடிப்படையில், வெளிநாட்டு நன்கொடை சட்ட விதிகளை மீறிய பல அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமைப்புகளின் உரிமம் ரத்துசெய்யப்பட்டன. தற்போது நாடு முழுவதும் சுமார் 22 ஆயிரத்து 400 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.
இந்நிலையில் என்.ஜி.ஓ.க்கள் தொடர்பாக மத்திய உள் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள குறிப்பில், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதில், "சட்டத்தின் 12ஆவது பிரிவின் (4) உள்பிரிவான (பி)-யின் கீழ் பதிவுசெய்து, வெளிநாட்டு நிதியுதவியைப் பெற விரும்பும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தங்களது தன்னார்வ நடவடிக்கைகளில் குறைந்தது 15 லட்சம் ரூபாய் வரையிலான தொகையை மக்கள் பணிக்குச் செலவழித்திருக்க வேண்டும்.
களப்பணியில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இயங்கியிருக்க வேண்டும்.
வெளியுறவு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தின்கீழ் பதிவுசெய்ய விரும்பும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அலுவலர்கள், தங்களது நன்கொடையாளரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட உறுதிப்பாட்டு கடிதத்தை வாங்கி அதனைப் பதிவாணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த உறுதிப்பாட்டு கடிதத்தில், வெளிநாட்டு பங்களிப்பின் அளவு மற்றும் எந்த நோக்கத்திற்காக அவை வழங்கப்பட்டது என்பது போன்ற தகவல்கள் முழுமையாகத் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அலுவலக பொறுப்பாளர்களின் ஆதார் எண்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களைக் கட்டாயமாக வழங்க வேண்டும்.
வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு முன் அனைத்து தொண்டு நிறுவனங்களும் அதற்குரிய அனுமதியைப் பெற விண்ணப்பிக்க வேண்டும். அதில் நிதியை வழங்குபவருடைய எஃப்.சி.ஆர்.ஏ. கணக்கு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
வெளிநாட்டில் தனியாக தொண்டு நிறுவனத்தை நடத்தும் நபராக அந்த வெளிநாட்டு நன்கொடையாளர் இருந்தால், அவருக்கும் அவரிடமிருந்து நிதியைப் பெறும் தொண்டு நிறுவனத்திற்கும் எந்தவொரு தொடர்பு இருக்கக் கூடாது.
அந்த வெளிநாட்டு நன்கொடையாளர், உதவியைப் பெறும் நிறுவனத்தில் தலைமை செயல்பாட்டாளராகவோ அல்லது அலுவலக பொறுப்பாளராகவோ இருக்கக்கூடாது.
அதேபோல, வெளிநாட்டு நன்கொடையாளரின் நிதி உதவியைப் பெறும் குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்தில் அங்கம்வகிப்போர், அலுவலகப் பொறுப்பாளர்கள் அல்லது நிர்வாகக் குழுவின் உறுப்பினர்கள் நன்கொடையாளரின் நெருங்கிய உறவினர்களாக இருக்கக் கூடாது.
அலுவலகச் செலவுகள், அவர்கள் பெறும் தொகையில் 20 விழுக்காடாக மட்டுமே இருக்க வேண்டும்.
தேர்தல் வேட்பாளர்கள், அரசு ஊழியர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் வெளிநாட்டு நிதியை ஏற்றுக்கொள்வதற்குத் தடைவிதிக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளது.
கடந்த 2014 - 2015ஆம் நிதியாண்டில், வெளிநாடுகளிலிருந்து மொத்த நன்கொடையாக 60 ஆயிரம் கோடி ரூபாய் இந்திய தொண்டு நிறுவனங்களால் பெறப்பட்டுள்ளது.
அந்தத் தொகை 2017 - 2018ஆம் ஆண்டில் 70 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்திருந்தது. இதனையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் இதைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.