மே மாதம் முதல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லைப் பிரச்னை நிலவிவந்த சூழலில், ஜூன் 15ஆம் தேதியன்று இரு ராணுவத்தினரும் மோதிக்கொண்டனர். இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் அதிகரித்துள்ளது. சீனப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டுமென பல தரப்புகளில் கோரிக்கை எழுந்துள்ளது.
சீன உபகரணங்களைப் பயன்படுத்தப்போவதில்லை என இந்திய ரயில்வே துறையும், பிஎஸ்என்எல் நிறுவனமும் முடிவுசெய்துள்ளன. மேலும், உபி மாநிலத்தில் ரயில்வே பணிகளுக்காக சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
பிற நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டுமெனவும், அதற்கேற்ப இந்திய நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டுமெனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். சீனாவுடனான பிரச்னை குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஜூன் 20ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சீனா விவகாரத்தில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்பதாகத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். மேலும், சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை என பிரதமர் மோடி அக்கூட்டத்தில் தெரிவித்தார்.
இச்சூழலில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களின் பட்டியலையும் சமர்ப்பிக்கும்படி தொழில் துறையிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதன்படி, சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களில் அத்தியாவசியப் பொருள்கள், அத்தியாவசியமற்ற பொருட்கள் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தியாவசியப் பொருள்களின் இறக்குமதியை மட்டும் தொடர்ந்து மேற்கொண்டு, அத்தியாவசியமற்ற பொருள்களை உள்நாட்டு நிறுவனங்களை வைத்தே உற்பத்தி செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.