குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் கடந்த இரண்டு மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இது நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அந்தப் பேராட்டக்காரர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த தயார் என மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஷாஹின் பாக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுவருவோரிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்த தயார். ஆனால் அது முறையாக நடக்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளித்த பிரதமர் நரேந்திர மோடி அரசு தயாராக உள்ளது" எனக் கூறியுள்ளார்.
கடந்த மாதம் அமலுக்கு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (2019) ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதத்துன்புறுத்தலுக்கு ஆளாகி 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்தியாவுக்கு அடைக்கலம் தேடிவந்த சிறுபான்மையின இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமண மதத்தினர், பார்சி மதத்தினருக்கு எளிதில் குடியுரிமை பெற்றுத்தர உதவுகிறது.
இந்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளதெனக் கூறி நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இச்சட்டத்துக்கு எதிராக கேரளா உள்பட பாஜக அல்லாத மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
இதையும் படிங்க : பிரதமர் பத்தரை மாற்றுத் தங்கம்; அவரை சந்தேகப்படாதீங்க - ராஜ்நாத் சிங்