நாடு முழுவதும் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் கரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், புதுச்சேரியில், அரியாங்குப்பம், திருவாண்டார்கோயில் பகுதியில் உள்ளவர்களுக்கு கரோனா தொற்று இருக்கிறதா என்பதை உறுதிசெய்யும் வகையில் அப்பகுதி மக்களுக்கு உமிழ் நீர் சோதனை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி ஜிப்மரில், பண்ருட்டியைச் சேர்ந்தவருக்கும், அவருடன் வந்திருந்த இரண்டு நபர்களுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளை பச்சை மண்டலம் ஆகவும், புச்சேரியில் வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ஐந்து இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் ஆரஞ்சு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வெளி மாநில, வெளி நாடுகளில் உள்ள புதுச்சேரியை சேர்ந்தவர்களை அழைத்துவர அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்கு முதலில் மாநில அரசின் இணையத்தில் தகவல் கொடுக்க வேண்டும். இதற்கான தகவலை இன்று முதல் இணையம் மூலம் தெரிவிக்கலாம் " என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி மாநில மக்கள், விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முகக்கவசம் அணியும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். மதுக்கடைகள், இதர கடைகள் மூடப்பட்டுள்ளதால் வருவாய் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் இனிவரும் காலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்தால், அரசு பணியாளர்களும் சம்பள விஷயத்தில் தியாகம் செய்யும் நிலை ஏற்படலாம். எனவே மக்கள் வாழ்க்கை முறையே மாற்றிக் கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் பார்க்க: 'தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பா?' - முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்